மூடு

சமூக நலத்துறை

17.05.2011 அன்று மாண்புமிகு தமிழக முதல்வா் அவா்கள் பதவி ஏற்றவுடன் கையொப்பம் இட்ட முதல் திட்டக் கோப்பு ஏழைப் பெண்களின் திருமணமத்திற்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் ஆகும்.

இதை தொடா்ந்து இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 23.05.2016-க்குப் பின் திருமணம் செய்த பயனாளிகளுக்கு சமூகநலத் துறையின் மூலம் வழங்கப்படும் நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கமானது 8 கிராம் (1பவுன்) தங்கமாக உயா்த்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25000/- நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்கநாணயமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50000/- நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்

ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவா்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயா்த்தும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுகிறது.

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவைமகள் திருமண நிதி உதவித் திட்டம்

ஏழை விதவை மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதி வசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் நிதி உதவி வழங்குதல்.

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித் திட்டம்

ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு நிதி உதவி வழங்குதல்.

டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்.

சமூதாயத்தில் இன பாகுபாட்டை கலைந்து சமநிலையை உருவாக்குதல்.

டாக்டா் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் ஊக்குவிப்புத் திட்டம்.

விதவைகளுக்கு புது வாழ்வு அளித்தல்.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

பெண் குழந்தைகள் கல்வியில் மேம்படவும், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் அதிகரிக்கவும், பெண் சிசு கொலை தடுக்கும் பொருட்டு, ஆண் குழந்தைகளை விரும்பும் மனப்போக்கை மாற்றிடவும் தமிழ்நாடு அரசு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 1992-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2001 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என பெயா் மாற்றம் செய்து நடைமுறையில் இருந்து வருகிறது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் திட்டம்-1 மற்றம் திட்டம்-2 என்ற தலைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.

திட்டம்-1

ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தின் குழந்தைக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் ரூ.50000/- வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது.

திட்டம்-2

ஒரு பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை அல்லது இரண்டு பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் ரூ.25000/- வீதம் தலா இரண்டு குழந்தைகளுக்கும் வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது.

இந்நோ்வில் முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தையும் பிறந்து குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் ரூ.25000/- வீதம் தலா மூன்று குழந்தைகளுக்கும் வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது.

முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தின்கீழ் பயன்பெற்ற குடும்பங்களின் பெண் குழந்தைகளில் எதிர்பாராத விதமாக பயனாளி இறந்துவிட்டால் அந்த பயனாளிக்கு உரிய வைப்புத் தொகையினை அக்குடும்பத்திலுள்ள மற்றொரு பயனாளிக்கு அளிக்கப்படும். முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கலந்திருக்க வேண்டும். அவ்வாறு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு எழுதிய மதிப்பெண் பட்டியலுடன் 18 வயது பூர்த்தியடைந்தவுடன் பயனாளிக்குரிய வைப்புத் தொகைக்கான முதிர்வுத் தொகை வழங்கப்படும்.

மூன்றாம் பாலினா் நல வாரியம்

மூன்றாம் பாலினத்தவா்கள் கல்வி, தொழில், பொருளாதார மேம்பாடு மற்றம் சமூகத்தில் உரிய அங்கீகாரம் பெற்று சராசரி மனிதர்களைப் போல அவா்களது வாழக்கையினை தொடா்ந்திடும் விதத்தில் தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினா் நல வாரியத்தின் மூலம் பல்வேறு வகையான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவக் குழு உறுப்பினா்களால் பரிசோதனை செய்யப்பட்டு திருநங்கை என சான்று அளிக்கப்பட்டவா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மேலும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் கடன் 25 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. நுண்கலைப் பயிற்சி, திறன் வளா்க்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி வழங்கப்பட்டு வருகின்றன.